தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் நிரந்தர பசுமைப் புரட்சிக்கு "நானோ தொழில்நுட்பம்" குறித்த கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை "என்றும் பசுமை புரட்சியில் நானோ தொழில்நுட்பத்தின் பங்கு" என்ற தேசிய அளவிலான கருத்தரங்கு பல்கலைக்கழக அண்ணா அரங்கில்  இன்று (அக்.,5) தொடங்கி 2 நாட்கள் நடைபெற்று வருகிறது.

இந்த கருத்தரங்கத்திற்கான நிதி உதவியை கனடா அரசாங்கமும், பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் (ஐ.ஆர்.டி.சி) இணைந்து வழங்குகின்றது. இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தியை பெருக்குவதும், அறுவடைக்குபின் ஏற்பட கூடிய மகசூல் இழப்பை குறைப்பதற்கான வழிவகை செய்வதுமாகும்.

இந்தியாவில் உள்ள 76 வேளாண் பல்கலைக் கழகங்களில் தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக் கழகத்தில் தான் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் வேளாண்மை என்ற ஆய்வு, கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த துறைக்கு தேவையான நிதிகட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக கனடா அரசாங்கமும், ஐ.ஆர்.டி.சி.,யும் இணைந்து ரூபாய் 12 கோடி வழங்கியுள்ளது.

இதன் மூலம்,  இந்த துறையில் பழங்களை கெடாமல் பாதுகாக்க ஹெக்சனால் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, அறுவடைக்குப் பின் ஏற்படக்கூடிய இழப்பு 10-12 சதவீதம்  குறைந்ததாக மாம்பழம் மற்றும் வாழைப்பழத்தில் கண்டறியப்பட்டது.

இன்றைய நாள் கருத்தரங்கினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.ராமசாமி தொடங்கி வைத்து முதன்மையுரை ஆற்றினார். அப்போது நானோ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதில் குறிப்பாக, நானோ தொழில்நுட்பம் மூலம் ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்துவது, கார்பன் நானோ துகள்கள் மூலம் பயிர்களுக்கான ஊட்டங்கள், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் இதர இடுபொருட்களை துல்லியமான முறையில் கண்டறிந்து பயிர்களுக்கு வழங்குவது மற்றும் சென்சார் தொழில்நுட்பத்தைப் பயிர் உற்பத்தியில் பயன்படுத்துவது போன்ற கருத்துக்களை வழங்கினார்.

நானோ தொழில்நுட்பத்துறை ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோடி ரூபாய் ஆராய்ச்சி மூலதனத்தைக் கொண்டு தொடங்கப்பட்டு தற்போது ஆராய்ச்சி நிதியாக ரூபாய் 20 கோடியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்காக, துறைசார்ந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுக்களை அவர் தெரிவித்தார்.

Newsletter